MacKenzie Bezos Divorce : அமேசான் என்ற இணைய சேவையின் தலைவர் ஜெஃப் பெசோஸ் ஆவார். அவர் 1993ம் ஆண்டு மெக்கன்ஸி என்ற நாவலாசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1994ம் ஆண்டு அமேசான் என்ற நிறுவனத்தை துவங்கினார் ஜெஃப் பெசோஸ்.
தன்னுடைய நண்பரின் முன்னாள் மனைவியான லாரன் சான்செஸ் என்ற பெண்ணை ஜெஃப் காதலித்து வந்தார். இந்த விவகாரம் வெளியான பின்பு, ஜெஃப் மற்றும் மெக்கன்ஸி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என்று அதிகாரப்பூர்வமாக ஜனவரியில் அறிவித்தனர். இந்நிலையில் 4ம் தேதி இருவரும் விவாகரத்து பெற்றனர்.
உலகின் மிக காஸ்ட்லியான விவாகரத்து
அமெரிக்க விவாகரத்து சட்டத்தின் படி, திருமணத்திற்கு பின்பு, இருவரும் சேர்ந்து ஈட்டிய பணம் மற்றும் பொருட்களை 50% பிரித்து ஜீவனாம்சம் தர வேண்டும். அதன்படி அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 50% சொத்தை மெக்கன்சி இந்த விவாகரத்து மூலம் ஜீவனாம்சமாக பெறுகிறார்.
அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெசோஸ் வைத்திருக்கும் 16% பங்குகளில் 4% மெக்கன்சிக்கு அளிக்கப்பட உள்ளது. அதன் சொத்து மதிப்பு மட்டும் 35 பில்லியன் டாலராகும். அதன்படி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை ஜீவனாம்சமாக பெறுகிறார் மெக்கன்சி.
மேலும் மெக்கன்சி கைவசம் உள்ள வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் பங்குகளை தன்னுடைய முன்னாள் கணவருக்கு விட்டுக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விவாகரத்து மூலம், உலகின் மூன்றாவது பணக்காரப் பெண்மணியாக கருதப்படும் நிலையை அடைந்துள்ளார் மெக்கன்சி. உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக இது பார்க்கப்படுகிறது.
மெக்கன்சியுடனான் திருமண பந்தம் ஜெஃப்பிற்கு முடிவடைந்த நிலையில், ஜெஃப்பின் காதலி லாரன் சான்செஸ் தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார்.