தென் ஆப்பிரிக்காவில் 6 மில்லியன் ரேண்ட் (சுமார் ரூ.3.33 கோடி) பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயது கொள்ளு பேத்திக்கு டர்பன் நீதிமன்றத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின் திங்கள்கிழமை டர்பன் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், இந்தியாவில் இருந்து சுங்கவரி இல்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்து தருவதாகக் கூறி தொழிலதிபர் எஸ்.ஆர்.மஹராஜ் என்பவரிடம் தென் ஆப்பிரிக்காவின் ரேண்ட் 6.2 மில்லியன் தொகை (ரூ.3.33 கோடி) மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, அவருக்கு லாபத்தில் ஒரு பங்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பிரபல மனித உரிமை செயல்பாட்டாளர் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் லதா ராம்கோபின் மீதான குற்றச்சாட்டை டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்து தண்டனை அளித்துள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி மறுத்துள்ளது.
லதா ராம்கோபினுக்கு எதிரான வழக்கில் 2015ம் ஆண்டில் விசாரணை தொடங்கியபோது, தேசிய வழக்கறிஞர் ஆணையத்தின் (என்.பி.ஏ) பிரிகேடியர் ஹங்வானி முலாட்ஸி, இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்கள் அனுப்பப்பட்டதாகவும் முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காக போலி விலைப்பட்டியல் மற்றும் ஆவணங்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது என்று கூறினார்.
அந்த நேரத்தில், லதா ராம்கோபின் 50,000 ரேண்ட் தென் ஆப்பிரிக்க பணத்திற்கு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், திங்கள்கிழமை விசாரணையின் போது, லதா ராம்கோபின் நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் காலணி விநியோகஸ்தர்களின் இயக்குனர் மஹராஜை ஆகஸ்ட் 2015 இல் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆடை, கைத்தறி மற்றும் காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.
மஹராஜின் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு லாப-பங்கு அடிப்படையில் நிதியையும் வழங்குகிறது.
தென் ஆப்பிரிக்க மருத்துவமனை குழு நெட்கேருக்கு 3 கண்டெய்னர் துணிகளை இறக்குமதி செய்ததாக லதா ராம்கோபின் மஹராஜிடம் தெரிவித்திருந்தார்.
“அவர் இறக்குமதி செலவுகளுக்கும் சுங்க வரி செலுத்துவதற்கும் நிதி பிரச்னையை சந்தித்ததாக கூறினார். மேலும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை எடுக்க அவருக்கு பணம் தேவையாக இருந்தது” என்று என்.பி.ஏ செய்தித் தொடர்பாளர் நடாஷா காரா திங்கள்கிழமை தெரிவித்தார்.
லதா ராம்கோபின் தனக்கு 6.2 ரேண்ட் மில்லியன் தேவை என்று மஹராஜிடம் அறிவுறுத்தினார். மஹராஜ்ஜை சமாதானப்படுத்த, லதா பொருட்களுக்கு கையொப்பமிடப்பட்ட கொள்முதல் ஆணையை என்று கூறி காட்டினார்.
“அந்த மாதத்தின் பிற்பகுதியில், நெட்கேர் விலைப்பட்டியல் மற்றும் விநியோகக் குறிப்பு என ஒன்றை லதா ராம்கோபின் மஹராஜுக்கு அனுப்பினார். அது பொருட்கள் வழங்கப்பட்டன என்பதற்கும் பணம் செலுத்தியதற்கும் சான்றாக இருந்தது” என்று அவர் கூறினார்.
லதா ராம்கோபின் “பணம் செலுத்தப்பட்டதாக நெட்கேரின் வங்கிக் கணக்கிலிருந்து உறுதிப்படுத்தினார்” என்று காரா கூறினார்.
ராம்கோபினின் குடும்ப நற்பெயர் மற்றும் நெட்கேர் ஆவணங்கள் காரணமாக மஹராஜ் அவருடன் கடனுக்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்திருந்தார்.
இருப்பினும், ஆவணங்கள் போலியானவை என்றும் லதா ராம்கோபினுடன் நெட்கேருக்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றும் மஹராஜ் கண்டுபிடித்த பின்னர், அவர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். அங்கே அவர் தன்னை சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசியல் நலன்களை மையமாகக் கொண்ட ஒரு ஆர்வலர் என்று கூறிக்கொண்டார்.
மகாத்மா காந்தியின் பிற வாரிசுகள் பலர் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அவர்களில் லதா ராம்கோபினின் உறவினர்கள் கீர்த்தி மேனன், மறைந்த சதீஷ் துபேலியா மற்றும் உமா துபேலியா-மெஸ்திரி ஆகியோரும் அடங்குவர்.
லதா ராம்கோபினின் தாய் எலா காந்தி அவரது செயல்பாடுகளுக்காக, குறிப்பாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தேசிய கௌரவங்கள் உட்பட சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.