இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலத்தீவுகள் உதவ முன்வந்துள்ளது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முஸ்லிகளின் உடல்களை, இலங்கை சுகாதாரத் துறை, இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராகவும் அவர்களின் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தகனம் செய்ததால் முஸ்லிம்களிடையே கோபத்தை தூண்டியது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக உதவுவதற்கு மாலத்தீவு அரசிடம் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச கோரிகை வைத்தார் என்று மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், இதுபோன்ற வேண்டுகோளின் பேரில் மாலத்தீவுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தொடர்பு எதுவும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பதிரானே தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பாதிப்பால் பலியான முஸ்லிம்களின் உடல்கள் தற்போது கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் சுகாதார சேவைகள் இயக்குநரின் ஆலோசனையின் பேரில் கையாளப்படுகின்றன என்று அமைச்சர் பதிரானே கூறினார்.
இந்த விவகாரம் குறித்து, இலங்கை சுகாதார அமைச்சகம் மற்றும் அமைச்சர்கள் அமைச்சரவையில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற விவாதங்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவது நல்லது என்று அமைச்சர் ரமேஷ் பதிரானே கூறினார்.
இருப்பினும், இலங்கையின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையையும் உலகெங்கும் நிலவும் உள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு இலங்கை சுகாதார அமைச்சகம் தற்போது இந்த விஷயத்தை பரிசீலித்து வருகிறது.
அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பதிரானே, முஸ்லிம் சமூகம் எழுப்பியுள்ள பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடனும் நேர்மையுடனும் தீர்க்குமாறு சுகாதார அமைச்சகத்திடம் இலங்கை கேட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் ரமேஷ் பதிரானே கூறினார்.
இது தொடர்பாக ஒரு முடிவு வரும் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைப் பாதுகாப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் பதிரானே, சுகாதார அதிகாரிகள் காலவரையின்றி உடல்களைப் பாதுகாக்க மாட்டார்கள் என்று கூறினார்.
இதுபோன்ற நேரத்தில் உடல்கள் காற்று புகாத இறுக்கமான கொள்கலன்களில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவை தற்போது வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். மேலும், உடல்களை காலவரையின்றி பாதுகாக்க முடியாது என்பதால், இந்த விவகாரம் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.