Mashrafe Mortaza : வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று காலையில் அறிவிக்கப்பட்டன. ஆளும் கட்சியான அவாமி கூட்டணி 300 தொகுதிகளில் 288 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக மூன்றாவது முறையாக ஷேக் ஹசினா வங்க தேசத்தின் பிரதமர் ஆகிறார்.
வங்கதேச கிரிக்கெட் வீரர் மஷ்ரஃப் மோர்டஸா அவாமி லீக் கட்சியின் சார்பில் நரைல் – 2 தொகுதியில் போட்டியிட்டார்.
கிரிக்கெட் வீரர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை ஏதும் இல்லை என்று கூறுகிறது அந்த நாட்டின் சட்டங்கள். எப்போதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் தான் அரசியலில் ஈடுபடுவது வழக்கம். சமீபமாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்றார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.
மேலும் படிக்க : மூன்றாவது முறையாக அரியணை ஏறும் ஷேக் ஹசீனா
நரைல் – 2 தொகுதில் வெற்றி பெற்ற மோர்டஸா ( Mashrafe Mortaza )
நரைல் – 2 தொகுதியில், மோர்டாஸாவும் அவரை எதிர்த்து ஜதியா ஒய்கியா முன்னணி கட்சியின் வேட்பாளர் ஃபரிதுஸாமன் இருவரும் களத்தில் இருந்தனர். நரைல் – 2 தொகுதியில் மோர்டஸாவிற்கு மட்டும் 2,74,418 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு 8006 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
வாக்கு இயந்திரங்களில் கோளாறுகள், மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கமல் ஹொசைன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோர்டஸா, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாகவே, தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாகவும் அறிவித்தார். 2009ம் ஆண்டில் இருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை மோர்டஸா. T20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் மோர்டஸா.