அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த புதன் கிழமை, 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நிகோலஸ் குரூஸ் என்ற அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சில பிரச்சனைகளில் சிக்கிய அவருக்கு எதிராக அந்தப் பள்ளி நிர்வாகம் அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளியிலிருந்து நீக்கியதால் அம்மாணவர் இதுபோன்ற வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாந்தி விஸ்வநாதன் தனது வகுப்பு மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, நிகோலஸ் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த போது, தனது அல்ஜீப்ரா II வகுப்பு மாணவர்கள் அனைவரையும் வகுப்பின் ஒரு மூளையில், ஒன்றாக குழுமச் செய்தார். இதைத் தொடர்ந்து, வகுப்பின் ஜன்னல்களில் பேப்பர்களை வைத்து, மாணவர்கள் வகுப்பின் உள்ளே இருப்பதை மறைத்து இருக்கிறார்.
https://www.youtube.com/embed/2Zr0QeFpUyc
இதனால், நிகோலஸ் அந்த வகுப்பை கடந்து சென்றுவிட்டதால், பல மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அதுமட்டுமின்றி, நிகோலசை போலீசார் கைது செய்ய பின்னர், மீட்புக் குழு வந்து கதவைத் தட்டியும் கதவைத் திறக்க ஷாந்தி மறுத்தவிட்டார். நீங்கள் உண்மையாக மீட்புக் குழுவாக இருந்தால் முறையாக சாவி கொண்டோ அல்லது கதவை உடைத்துக் கொண்டோ உள்ளே வாருங்கள். அப்படி நீங்கள் வராத வரை கதவை திறக்க மாட்டேன் எனவும் ஷாந்தி கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, கதவை உடைத்துக் கொண்டு மீட்புக் குழு உள்ளே சென்று அனைவரையும் மீட்டது. வகுப்பில் பாடம் எடுப்பது மட்டுமின்றி, மாணவர்களின் உயிரை, தன் உயிரை பணயம் வைத்து சமயோஜிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ஆசிரியை ஷாந்திக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஷாந்தி விஸ்வநாதன் சென்னையைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.