Meghan and Harry welcome baby girl, Lilibet Diana : அமெரிக்காவில் வசித்து வரும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகனுக்கு இரண்டாவது குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்களின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்டார்.
அதில் புதிதாக பிறந்திருக்கும் தங்களின் பெண் குழந்தைக்கு அம்மா டயானாவின் பெயரையும், பாட்டி எலிசபெத்தின் பெயரையும் இணைத்து லில்லிபெத் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்ஸ்டர் என்ற பெயரை சூட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தை கலிஃபோர்னியாவில் உள்ள சாண்ட பார்பரா காட்டேஜ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 11:40க்கு பிறந்தஹாக அந்த செய்தி குறிப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இத்தம்பதியினருக்கு ஆர்ச்சி என்ற இரண்டு வயது மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறவெறி தாக்குதலுக்கு ஆளான மேகன் தன்னுடைய கணவருடன் கடந்த ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். மேலும் அனைத்து ராஜ பொறுப்பில் இருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக இவ்விருவரும் முன்பே அறிவித்திருந்தனர்.
மேகன் முதல்முறையாக கர்ப்பம் தரித்த போது அக்குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்று கேள்வி எழுப்பியதாகவும், மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கேட்ட உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் சமீபத்தில் நடைபெற்ற ஒப்ராவுடனான பேட்டியில் இவ்விருவரும் கூறியிருந்தது இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil