அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்.
பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள கிராண்ட் பலாய்ஸில் நடந்த செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த மோடி அமெரிக்காவுக்குச் சென்றார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அதிபர் டிரம்பை போலவே, இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இருவரும் சேர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அரசின் செயல் துறை தலைவரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தித்தார்.
வாஷிங்டனில் உள்ள பிளேர் ஹவுஸில் பிரதமர் மோடியை சந்தித்த எலான் மஸ்க், விண்வெளி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், ‘குறைந்தபட்ச அரசு.. அதிகபட்ச நிர்வாகம்..’ என்ற இந்தியாவின் சீர்திருத்த முயற்சி குறித்து விவாதித்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கை தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமியையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதில், சர்வதேச பாதுகாப்புக்கான சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தப்பின் வாஷிங்டன்னில் பேசிய பிரதமர் மோடி, "நான் எப்போதும் ரஷ்யா, உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்; இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலரும் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையோடு இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள், உண்மையில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கிறது.
இது போருக்கான நேரமில்லை என்பதை நான் புதினிடமே தெரிவித்துள்ளேன். இன்றும் கூட, தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்பதே எனது நம்பிக்கை, இரு நாடுகளும் (ரஷ்யா மற்றும் உக்ரைன்) கலந்து கொள்ளும் மன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்படும்போதுதான் போருக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறது.
போர் நிறுத்தத்திற்காக அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கூடிய விரைவில் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்" என்றார்.
மேலும் கௌதம் அதானி குறித்து ட்ரம்பிடம் பேசினீர்களா என்னும் கேள்விக்கு பிரதமர் மோடி,"இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் 'வசுதைவ குடும்பகம்'. நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனும் எனக்கு சொந்தம் என்று நான் நம்புகிறே இரு நாடுகளின் இரு முக்கிய தலைவர்கள் இத்தகைய தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் விவாதிப்பதில்லை” என்றார்.