/indian-express-tamil/media/media_files/2025/02/14/3GEq48rjfy12QTsPVrZK.jpg)
அமெரிக்க - இந்திய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதைக் குறிக்கும் கூட்டத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல ஒப்பந்தங்கள் குறித்து பேசினர். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவது, அதிக அமெரிக்க எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: F-35 jets, energy deals, and trade talks: PM Modi, President Trump meet to strengthen India-US ties
2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கான இராணுவ பொருட்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கும் என்றும், இறுதியில் எஃப்-35 போர் விமானங்களை வழங்கும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இந்தியாவுக்கு அமெரிக்கா எரிசக்தியை விற்பனை செய்யும் என்றும், பல்வேறு வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடும் ஈடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்கு வரவுள்ளதாக அறிவித்தனர். 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு கூட்டாண்மை புதிய உச்சத்தை எட்டுகிறது
“இந்த ஆண்டு முதல், நாங்கள் இந்தியாவிற்கான இராணுவ பொருட்கள் விற்பனையை பல பில்லியன் டாலர்களாக அதிகரிக்கவுள்ளோம். எஃப் - 35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் நாங்கள் வழி வகுத்து வருகிறோம்” என்று மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் கூறினார்.
“நாங்கள் எங்கள் பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்தும்போது, எங்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவோம். நல்ல நம்பிக்கையின் சமிக்ஞையாக எங்கள் வர்த்தக உறவுக்கு அதிக நியாயத்தையும், பரஸ்பரத்தையும் கொண்டு வருவோம். பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவின் நியாயமற்ற மிக வலுவான வரிகளை குறைப்பதாக அறிவித்தார்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"இந்தியா பல பொருட்களுக்கு 30 முதல் 70 சதவீதம் வரி விதிக்கிறது. சில சமயங்களில் அதை விடவும் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்க கார்களுக்கு 70 சதவீதம் வரி விதிப்பதால், இன்று அந்த கார்களை விற்க முடியாத நிலை இருக்கிறது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலராக உள்ளது, கடந்த 4 ஆண்டுகளாகக் கவனிக்கப்பட வேண்டிய நீண்ட கால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பிரதமர் மோடியும் நானும் ஒப்புக்கொண்டோம்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆற்றல் ஒப்பந்தங்கள்
"எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை மூலம் வர்த்தக வேறுபாட்டை மிக எளிதாக ஈடுகட்ட முடியும். இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்காவை மீட்டெடுக்கும் எரிசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தை நானும் பிரதமரும் எட்டினோம்" என டிரம்ப் கூறியுள்ளார்.
தீவிரவாதத்தை ஒன்றாக எதிர்கொள்வது
தஹாவூர் ராணாவை நாடு கடத்துவது குறித்து டிரம்ப் கூறுகையில், "சதிகாரர்களில் ஒருவரையும், உலகின் மிகத் தீயவர்களில் ஒருவரையும் நாடு கடத்துவதற்கும், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவில் நீதியை எதிர்கொள்வதற்கும் எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, அவர் நீதியை எதிர்கொள்ள இந்தியாவுக்குத் திரும்பப் போகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும் வலுவாக இணைந்து நிற்கும் என்றும் மோடி கூறினார். இந்தியாவில் இனப்படுகொலையை நடத்திய ஒருவரை ஒப்படைத்ததற்காக, அதிபர் டிரம்பிற்கு தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன
2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
"இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம். எரிசக்தி உள்கட்டமைப்புக்கான முதலீடு அணுசக்தியிலும் அதிகரிக்கும். சிறிய மட்டு உலைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று மோடி கூறியுள்ளார்.
விண்வெளி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
பாதுகாப்புத் தயார்நிலை குறித்து மோடி, “வரவிருக்கும் காலங்களில் கூட்டு வளர்ச்சி, கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறோம். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் நமது திறன்களை மேம்படுத்தும்” என்றார்.
"இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் பயோடெக்னாலஜி மற்றும் பல தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விண்வெளியில் அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை பெற்றுள்ளோம். இஸ்ரோ மற்றும் நாசா இடையே பரஸ்பர ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் விண்வெளிக்கு பறக்கும்" என்று மோடி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீது நடவடிக்கை
அதானி குழுமத்தின் மீதான நடவடிக்கை குறித்து டிரம்புடன் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மோடி, "முதலாவதாக, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கலாச்சாரம் மற்றும் நமது தத்துவம் என்பது முழு உலகமும் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும். ஒவ்வொரு இந்தியனும் எனது சொந்த குடும்ப உறுப்பினர். மேலும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்கள் என்று வரும்போது, இரு நாட்டு தலைவர்களும் அந்த விஷயத்தில் ஒன்று கூடி விவாதிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
குவாட் மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தை
"இந்தோ-பசிபிக் பகுதியில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். குவாட் இதில் சிறப்புப் பங்கு வகிக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள குவாட் உச்சிமாநாட்டின் போது, எங்கள் கூட்டாளி நாடுகளுடன் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்".
"வரலாற்றின் மிகப்பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்க நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் அமெரிக்கா வரை இயங்கும், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள் மூலம் எங்கள் கூட்டாளர்களை இணைக்கும். இது ஒரு பெரிய வளர்ச்சி" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவைப் பற்றி கேட்டபோது, இந்தியா-சீனா எல்லையில் சண்டைகள் இருப்பதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும், தன்னால் உதவ முடிந்தால், உதவலாம் என்றும் டிரம்ப் கூறினார்.
"நாங்கள் சீனாவுடன் ஒரு நல்ல உறவைப் பெறப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். கோவிட் வரை நான், ஜனாதிபதி ஜியுடன் நன்றாகப் பழகினேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம். மேலும், சீனா உலகில் மிக முக்கியமான நிலையில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் எங்களுக்கு உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன். சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா என நாம் அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போர், வரி விதிப்புகள்
முன்னதாக, ஓவல் அலுவலகத்தில் மோடியை டிரம்ப் சந்தித்தபோது, இந்தியாவிற்கான சில அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். வியாழன் அன்று தனது ஓவல் அலுவலகத்தில், டிரம்ப் மோடியை வரவேற்றார். குறிப்பாக, சிறந்த நண்பர் என்று வர்ணித்தார். "நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். மிக விரைவில் எதிர்காலத்தில் அறிவிக்க பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
ரஷ்யா - உக்ரைன் மோதல்கள் தொடர்பான பதில்
"போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான டொனால்ட் டிரம்பின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். போரின் போது இந்தியா நடுநிலை வகித்ததாக உலகம் உணர்கிறது. ஆனால் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையில், இந்தியா அமைதியின் பக்கம்தான் உள்ளது" என்று மோடி கூறினார்.
"நான் அதிபர் புதினைச் சந்தித்தபோது, ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று கூடச் சொன்னேன். போராட்ட களத்தில் தீர்வு காண முடியாது என்றும் கூறியிருந்தேன்'' எனவும் மோடி தெரிவித்தார்.
- Shubhajit Roy
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.