இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை உள்நாட்டு போர் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல ஈழ இயக்கங்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போரில், ஏராளமாக தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த போர் கடந்த 2009 மே 18 –ம் தேதி முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக கூறிய இலங்கை அரசு இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி இலங்கை அரசு வெற்றி நாளாக கொண்டாடி வரும் நிலையில், ஈழத்தமிழகர்கள் அந்நாளை முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நினைவு நாளை போற்றும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் சார்பில், யாழ்பாணம் பல்கலைகழகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அன்றுமுதல் ஆண்டுதோறும் இந்த நினைவுத்தூண் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 8-ந் தேதி இரவு இலங்கை அரசு திடீரென முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்து ஈழத்தமிழர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உலக மக்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
இதனால் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் யாழ் பல்கலை கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துன், மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய துணைவேந்தர் சற்குணராஜா மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"