மியான்மர் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
ஊழல், உத்தியோகபூர்வ ரகசியச் சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் கோவிட் விதிமுறைகளை மீறியது என மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் சூகி மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்திருக்கிறார்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து, காவலில் வைத்திருந்தது. அன்று முதலே வீட்டு காவலில் இருக்கும் சூகி மீது, தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட வண்ணம் இருந்தது.
இதுதொடர்பான விசாரணை பல மாதங்களாக மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீது மியான்மர் ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பியதற்காகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதற்தாகவும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், இந்த வழக்குகள் ஆதாரமற்றவை , அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரவும், சட்ட நடவடிக்கைகளில் அவரை பிணைத்து, ராணுவம் அதிகாரத்தில் இருக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டினர்.
அதே சமயம், சூகிக்கு அவரது சொந்த நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதி தலைமையிலான ஒரு தனி நீதிமன்றத்தால் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil