நடைமுறையில் இருப்பதை மாற்றும் போது பிரச்சனை வரவே செய்யும் - துபாயில் மோடி பேச்சு!

அபுதாபியில் முதல் முறையாக அமைய உள்ள இந்து கோவிலுக்கு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து தற்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நய்ஹானை சந்தித்து பேசினார், அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், எண்ணெய் மற்றும் ஐந்து முக்கிய துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து, அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற மோடி, மரியாதை செலுத்தினார்.

இதன்பின் மோடி பேசுகையில், “இந்தியர்களின் அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றுவதே பாஜக அரசின் முக்கிய இலக்கு. நீண்ட கால பலன்களை மனதில் வைத்தே தமது அரசு செயல்படுகிறது. 4 வருடங்களாக நாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளேன். கடந்த 4 வருடங்களில் இந்தியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது, நாடும் வளர்ச்சியடைந்துள்ளது. மகாத்மா காந்தி கொள்கைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏழைகள் வரவேற்கின்றனர். ஆனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களே தற்போது வரை புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். 70 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தவற்றில் மாற்றம் செய்யும்போது சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். வணிகத்தை தாண்டியும் இந்தியா – ஐக்கிய அமீரக உறவு என்பது தனித்துவமானது. வளைகுடா நாடுகளில் 30 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். அந்நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் உதவி செய்கின்றனர். அரபு நாடுகள் இந்தியர்களுக்கு 2வது தாய் வீடாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சாதனைகளை அனைவரும் பேசுகின்றனர். எளிதில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா 100-வது இடத்திற்கு வந்துள்ளது”என்றார்.

முன்னதாக அபுதாபியில் முதல் முறையாக அமைய உள்ள பிரம்மாண்ட இந்து கோவிலுக்கு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். 55 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைய உள்ள இந்த கோவிலுக்கு நிலம் ஒதுக்கியதற்காக அபுதாபி இளவரசருக்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

×Close
×Close