இந்தியாவில் சுற்றுபயணம் செய்து வரும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு தலைவர்களும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கூட்டு பொருளாதார திட்டங்கள் குறித்தும், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,"பொதுவான பிணைப்பு எங்களை இணைக்கின்றது. எங்கள் பிராந்தியத்தில் பயங்கரவாதம் ஒரு பெரிய பிரச்சினை என்பதை நாங்கள் இருவரும் ஒத்துக்கொள்கிறோம், பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்போம்" என்றார். மேலும்,"இலங்கை தமிழர்கள் பிரச்சினையை குறித்து திறந்த மனதுடன் விவாதித்தோம்; தமிழ் மக்களின் விருப்பங்களை இலங்கை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்"என்றும் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இலங்கை நாட்டிற்கு அளிக்கும் முன்னுரிமைக்கு நன்றி தெரிவித்த ராஜபக்ஷ,"பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவுகிறது. இந்தியா எங்களது நீண்டகால நண்பர்; நெருக்கமான வரலாற்று இணைப்புகள் எங்கள் உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ, ஐந்து நாள் அரசு பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கை தேசத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
முன்னதாக, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை பிரதமரை சந்தித்தார். மஹிந்த ராஜபக்ஷ வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.