NASA: அமெரிக்க விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர் ஆகியோர் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர். இதன்மூலம் முதல் முறையாக விண்வெளியில் தனியாக பெண்களை நடைபயணம் மேற்கொள்ள வைத்து 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கா - ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் இவர்கள் விண்வெளியில் மிதந்தபடி நடைபயணம் மேற்கொள்வர். ஆண்களின் துணையுடன், பெண் வீராங்கனைகளும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணத்தை மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கடந்த மார்ச்சில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் விண்வெளி வீராங்கனைகள் அணியும் உடைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி வீராங்கனையரான கிறிஸ்டினா கோச் (40 வயது), ஜெசிகா மேர (42 வயது) ஆகியோர் கடந்த 17-ம் தேதி, விண்வெளியில் வெற்றிகரமாக நடைபயணம் மேற்கொண்டனர்.
விண்வெளி ஆய்வு மையத்தின் வெளிப்பகுதியின் பேட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக இவர்கள் இருவரும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் முதன் முறையாக விண்வெளியில் தனியாக பெண்கள் நடைபயணம் மேற்கொண்ட சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.