லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் இன்று உயிரிழந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் நீண்ட காலமாக தொண்டை புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 68 வயதான குல்சூமுக்கு கடந்த ஜூன் மாதம் லண்டன் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது. நுரையீரல் பிரச்னையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மகன்கள் இருவரும் லண்டனில் தங்கி, அம்மாவை மருத்துவமனையில் கவனித்துக்கொண்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குல்சூம் இன்று காலமானார். பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஜியோ டிவி இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.
தற்போது இவரது மறைவால், ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.