இந்தோனேசியா நிலநடுக்கம் மிகவும் மோசமான பாதிப்புகளை தந்திருக்கிறது. 6.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஞாயிறு அன்று இந்தோனேசியாவில் ஏற்பட்டது. இந்தோனேசிய நாட்டின் தீவான லோம்போக் தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் பல்வேறு கட்டிடங்கள் உடைந்து நொறுங்கியது.
இந்தோனேசியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை
ஞாயிறு அன்று பலி எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஆனால் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்ட போது இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டு நிறையே பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
14 நாட்களுக்கு எமெர்ஜென்சியை அறிவித்திருக்கும் அந்நாட்டின் அரசு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
தங்களின் உடைமைகளை இழந்துள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை துரிதமாக செய்து வருகிறது இந்தோனேசிய அரசு.
நிலநடுக்கத்தையும் கருத்தில் கொள்ளாமல் தொழுகை நடத்திய இமாம் - வீடியோ பதிவு
இந்தோனேசியா நிலநடுக்கம் : மோசமான பாதிப்பினை சந்தித்த வடக்கு லோம்போக்
வடக்கு லாம்போக் பகுதி தான் இந்த நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் மட்டும் சுமார் 334 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான நிவாரண நிதிகளை தொடர்ந்து அளிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறியுள்ளது அந்நாட்டின் அரசு.
வடக்கு லாம்போக்கினை தீவின் மற்ற பகுதியோடு இணைக்கும் அனைத்து சாலைகளும் இந்த நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நிவாரணப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.