நேபாளத்தின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
மலைக் கிராமங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அதிகாரிகள் தெரிவித்தனர்
மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக நேபாள ராணுவம் மற்றும் நேபாள காவல்துறை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் அதன் அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மீட்புப் படையினருக்கு சில பாதைகளை அணுக முடியாதபடி தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.
நேபாளத்தின் மேற்கு கோயில் நகரமான ஜும்லாவுக்கு அருகில் மையம் கொண்ட நிலநடுக்கம் இரவு 11:32 மணியளவில் ஏற்பட்டது என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், அதன் மையம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கே 250 மைல் தொலைவில் உள்ள ஜஜர்கோட்டில் இருப்பதாகக் கூறியது.
இந்நிலையில் நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் ‘பிரசந்தா’ சனிக்கிழமை காலை மருத்துவக் குழுவுடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி மற்றும் வட இந்தியாவில் கடுமையான அதிர்வுகளை தூண்டியது, இதனால் பயந்து போன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
டெல்லி-என்சிஆர், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனிடையே நேபாள நில நடுக்கம் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி, நேபாளத்துடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என்றும், அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கூறினார்.
நேபாளத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
முந்தைய மாத சம்பவத்தைப் போலவே, சமீபத்திய நிலநடுக்கமும் மிகவும் ஆழமற்றதாக இருந்தது, இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிமீ கீழே தோன்றியது. சிறிய ஆழத்தில் ஏற்படும் பூகம்பங்கள் பொதுவாக அதிக சக்தி வாய்ந்தவை மற்றும் அதிக அழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை, என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
Read in English: Nepal earthquake: Death toll rises to 128; communication cut off with many areas, say officials
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“