சீனாவில் அரசுமுறை பயணமாக ஆறு நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிறு அன்று தாயகம் திரும்பிய கே.பி ஒலி பாராளுமன்றத்தில் பேச்சு...
சீனா மற்றும் நேபாளம் என இரண்டு நாடுகளும் அந்நாடுகளின் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதை நோக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக முனைப்புடன் செயல்படுகின்றன. சிறு சிறு அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவுடனோ, சீனாவுடனோ அரசியல் நாடங்களை நடத்தாது என்றும் பேசியிருக்கின்றார் நேபாள பிரதமர் ஒலி.
“எந்த நாட்டுடனும் ஆரோக்கியமான நட்புறவினை மேம்படுத்தவே நாம் விரும்புவதால் தான் நம்முடைய வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் மற்ற சர்வதேசக் கொள்கைகளை நேர்மையுடன் கடைபிடித்து வருகின்றோம். எக்காரணம் கொண்டும் அக்கொள்கைகள் நாட்டின் பாரம்பரியத்தையும், பாதுகாப்பினையும், உலக அமைதியினையும் சீர் குலைக்கும் வகையில் அமையாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நேபாளம் மற்றும் சீனா இணைந்து டட்டோபானி பகுதியை மீண்டும் மக்கள் பயன்படுத்தும்படி திறந்துவிடப் போவதாகவும், ரசுவாகதி மற்றும் கெருங் பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் முடிவு செய்திருக்கின்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சீனாவும் நேபாளமும் இணைந்து அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் துறைமுகங்கள், வான்வழிப் போக்குவரத்து, ரயில் சேவைகள், சாலைகள், தொலைத்தொடர்பு திட்டங்கள் என அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புவதாக தகவல்.
இந்த சந்திப்பின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமையப்போகும் ரயில் போக்குவரத்து குறித்து தான். சீனாவில் இருக்கும் கைய்ராங் துறைமுகத்தில் இருந்து, நேபாளத்தின் காத்மாண்டு வரை விரிவடைகின்றது இந்த ரயில் போக்குவரத்து. ஹிமாலய மலைப்பகுதிகளில் அமையப் போகும் மிக முக்கியமான ரயில் போக்குவரத்தாக இது அமையும். இதற்காக சீனா பில்லியன் கணக்கில் முதலீடு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ல் தொடங்கப்பட்ட இந்த ரயில் போடும் பணி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து இந்தியா வரை நீளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.