நைஜீரியாவில் பல ஆண்டுகளாக போகோ ஹரம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பிணைக்கைதிகளாக பொதுமக்களை பிடித்து வைத்தல், அரசை அச்சுறுத்துதல், அவர்களுக்கு தேவையான காரியங்களுக்காக பொதுமக்களுக்கு பயத்தினை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயங்கரவாத சதித்திட்டங்களை அந்த பயங்கரவாத குழு தொடர்ச்சியாக செய்து வருகிறது.
சமீபத்தில் மைடூகுரி நகரில் அருகே அமைந்திருக்கும் கோஷோபே கிராமத்தில் விவசாய பணிகள் நடைபெற்றது. விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த விவசாயிகளை கடத்தி, கை, கால்களை கட்டிப்போட்டனர் அங்கு வந்த போகோ ஹாரம் தீவிரவாதிகள். பின்னர் அவர்களில் 110 விவசாயிகளை கழுத்தறுத்து கொன்றனர் அந்த தீவிரவாதிகள். அங்கிருந்த பெண்கள் பலரையும் கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியானது.
பொதுவெளியில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும் அரசியல் மட்டத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை பாதக சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கண்டனம் தெரிவித்தது அந்நாட்டு அரசு. கடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் வீடு வந்து சேர்ந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களின் பெரும்பாலானோர் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள சொகொடோ மாநிலத்தில் இருந்து 1000 கி.மீ பயணித்து வடகிழக்கிற்கு வேலைக்காக வந்தவர்கள். இந்த ஆண்டில் நடைபெற்ற மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் இது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil