லித்தியம் பேட்டரிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது அதன் தற்போதைய நிலையிலான வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக, வேதியியல் விஞ்ஞானிகளான ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு 2019ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அக்டோபர் 7ம் தேதி (மருத்துவத்துறை), 8ம் தேதி (இயற்பியல்), 9ம் தேதி (வேதியியல்), 10ம் தேதி (இலக்கியம்), 11ம் தேதி (அமைதி) மற்றும் 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மொபைல் போன்கள் முதல் லேப்டாப்கள், இ. வாகனங்கள் வரையிலான எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக வேதியியல் விஞ்ஞானிகள் ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1970ம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஸ்டான்லி விட்டிங்ஹாம், முதன்முறையாக லித்தியம் பேட்டரிகளை உருவாக்கினார்.
ஜான் குட்எனாப், அந்த லித்தியம் பேட்டரியின் செயற்திறனை இருமடங்காக உயர்த்தினார். இதன்மூலம் அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக அமைந்தது.
அகிரா யோஷினோ, லித்தியம் பேட்டரியில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, லித்தியம் அயனிகளை பயன்படுத்தி அதன் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்தார். தற்போது நடைமுறையில் இந்த லித்தியம் அயனி பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் ஆராய்ச்சி, வயர்லெஸ் மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு கமிட்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், கடந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில், கடந்தாண்டிற்கான பரிசையும் சேர்த்து அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.