Nobel Prize For Peace 2019: எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்டை நாட்டுடன் அமைதி வழியில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கண்டதால், இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது.
முக்கியத்து துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு உலக அளவில் கிடைக்கும் பெரிய அங்கீகாரமாக நோபல் பரிசு இருக்கிறது. குறிப்பாக மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன் அல்லது ஒன்பது லட்சம் டாலர் பரிசுத் தொகை (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) மற்றும் ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவுக்கும், அண்டை நாடான எரித்திரியாவுக்கும் 1998 முதல் 2000 வரை பெரிய அளவில் மோதல்கள் நடைபெற்றன. இதற்கு காரணம், இரு நாடுகள் இடையிலான எல்லைப் பிரச்சினை! இதற்கு அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக அபய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1895-ல் நோபல் பரிசை நிறுவியவரான ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினம் டிசம்பர் 10-ம் தேதி வருகிறது. அன்று ஆஸ்லோவில் நடைபெறும் விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும்.