அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளூக்குக்கு 2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி வியாழக்கிழமை 2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் குளூக்கிற்கு வழங்கியது.
உலகின் புகழ்பெற்ற இலக்கியத்துகாக வழங்கப்படும் விருது பல ஆண்டுகளாக ஊழல் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது
ஸ்டாக்ஹோமில் ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலாளர் மேட்ஸ் மால்ம் நோபல் பரிசை அறிவித்தார். இந்த அறிவிப்பை நோபல் பரிசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. “2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளூக்கிற்கு வழங்கப்படுகிறது. அவருடைய கவிதைகள் கடுமையான அழகுடன் தனிமனித இருப்பை உலகளாவியதாக ஆக்குகிறது. மேலும், அவருடைய தவறிழைக்காத கவித்துவமான குரலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.
கவிஞர் லூயிஸ் குளூக் 1943ம் ஆண்டு பிறந்தவர். கவிஞர் லூயிஸ் குளூக் கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளர். முதல்பிறப்பு என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், 1975 ஆம் ஆண்டில் அவரது இரண்டாவது தொகுப்பு தி ஹவுஸ் ஆன் மார்ஷ்லேண்ட் அவரை ஒரு சிறந்த இலக்கிய ஆளுமையாக நிறுவியது. குளூக் தொடர்ச்சியாக கவிதைகளை எழுதி வருகிறார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு இப்போது சிறிது காலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் ரகசிய அமைப்பான ஸ்வீடிஷ் அகாடமியை உலுக்கிய பின்னர், 2018ம் ஆண்டில் நோபல் விருது வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அமைப்பில் பெருமளவிலான உறுப்பினர்களின் வெளியேற்றத்தையும் தூண்டியது. நோபல் அறக்கட்டளையின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் அகாடமி உறுப்பினர்களை மாற்றியமைத்த பின்னர், கடந்த ஆண்டு இரண்டு பரிசு பெற்றவர்கள் பெயர்களை அறிவித்தது. 2018 பரிசு போலந்தின் ஓல்கா டோகார்சூக்கிற்கும், 2019 ஆம் ஆண்டு பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கேவுக்கும் வழங்கப்பட்டது. ஹேண்ட்கேவுக்கான பரிசு எதிர்ப்பு புயலை ஏற்படுத்தியது: அவர் 1990 களின் பால்கன் போர்களின் போது செர்பியர்களின் வலுவான ஆதரவாளர். அவர் செர்பிய போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார் என்று ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"