பிரதமர் மோடி, தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நுாலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். அப்போது, தமிழில், குறள் ஒன்றைப் படித்து, அதற்கு பொருளும் கூறினார்.
இந்தியா - மியான்மர் - தாய்லாந்து நாடுகளிடையேயான தொடர்பு, ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளதாக தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து வாழ் இந்தியர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். விழாவில் பிரதமர் மோடி பேச்சை துவக்கியதும், தமிழில் 'வணக்கம்', இந்தியில் 'நமஸ்கார்' என்று கூறி பேச்சை தொடங்கினார்.
அவருடைய பேச்சின் போது,
'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'
என்ற திருக்குறளை தமிழில் கூறி, அதற்கு 'தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம், தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே' என்ற அர்த்தத்தையும் கூறினர். இதனை ரசித்த மக்கள், 'மோடி, மோடி' என கோஷங்கள் எழுப்பி, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் அவர் பேசியதாவது, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக, இந்தியாவின் வடகிழக்கு பகுதி விரைவில் மாறும். நான் '3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாய்லாந்து வந்தேன். அப்போது எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. இருநாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை. தாய்லாந்தில் நான் இப்போது இருப்பதை என் தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே! உங்களுடைய கடின உழைப்புக்கும் பங்களிப்புக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் தாய்லாந்து உணர்வுபூர்வமாக இணைந்துள்ளன. உலகில் வாழும் இந்தியர்களின் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.
காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம்.
இந்தியாவில்பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் வங்கிகளுடன் இணைத்துள்ளோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.' இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமர் மோடி, 16வது ஆசியான் - இந்தியா மாநாடு, 14வது கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் 3வது ஆர்சிஇபி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தாய்லாந்து வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.