நார்வே நாட்டில் கட்டாயமாக ராணுவ படையில் சேர்பவர்கள், பணி முடிவடைந்து புறப்படும்போது, அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைகள், பிரா, காலுறைகளை திருப்பி தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நார்வே ராணுவம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், தொற்றுநோய் காரணமாக பொருள்கள் வருவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
நார்வேஜியன் பாதுகாப்பு லாஜிஸ்டிக்ஸ் அமைப்பின் கூற்றுப்படி," தற்போதைய சூழ்நிலையில் கையிருப்பு குறைவு காரணமாக, இந்த நடவடிக்கை அவசியமானது. இது, ஆயுதப்படைகளில் புதிதாக சேரும் வீரர்களுக்கு ஆரம்ப காலத்திலே அதிக அளவிலான ஆடைகளை வழங்க வழிவகுக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹான்ஸ் மீசிங்செட் கூறுகையில், "சரியான சோதனைகள் மற்றும் சுத்தம் செய்த பிறகு, ஆடைகள் மீண்டும் பயன்படுத்துவது சிறந்த நடைமுறையாகக் கருதப்படுகிறது" என்றார்.
தற்போது வரை, ஆண்டுதோறும் ராணுவ சேவையில் ஈடுபடும் சுமார் 8,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள், தங்களது வெளிப்புற ஆடைகளைத் திருப்பி தருவது வழக்கம். அவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ளாடைகள், காலுறைகள் மட்டுமே ராணுவ வளாகத்தை விட்டு வெளியே எடுத்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நார்வேயில் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயமாக ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும். பெரும்பாலும் 12 மற்றும் 19 மாத காலக்கட்டத்தில் பணியாற்றுவார்கள்.
மேலும் பேசிய மீசிங்செட், ஆடைகள் இருப்பு குறைவாக இருப்பதற்கு தொற்றுநோய் மட்டுமே காரணம் அல்ல. இது நிதி, ஒப்பந்தங்கள் மற்றும் பிற சிக்கல்களையும் சார்ந்துள்ளது என்றார்.
நேட்டோ-உறுப்பினரான நார்வேயின் தேசிய பாதுகாப்பு இதழான Forsvarets Forum,ஆயுதப் படைகள் இத்தகைய குறைபாடுகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாக ஆடை பிரச்சினை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
2020 இல், வீரர்களின் ஆடை மற்றும் உபகரணங்களில் மூன்றில் ஒரு பங்கு காணவில்லை என கூறப்படுகிறது. இதற்கு, ஆடைகளை ஆர்டர் செய்தல் மற்றும் டெலிவரி செய்வதில் உள்ள சிஸ்டத்தில் உள்ள பிழைகள் தான் காரணம் என சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.