அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பதவி வகித்தவர் ஒபாமா. இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக பதவி வகித்தவர் தான் தற்போதைய அமைரிக்க அதிபரான ஜோ பைடன்.
இவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சிக்னேச்சர் ஹெல்த் கேர் சட்டத்தின் 12ஆவது ஆண்டு விழா கடந்த செவ்வாக்கிழமை வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்தார் ஒபாமா.
அப்போது மேலையில் பேசிய அவர், தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த அதிபர் ஜோ பைடனிடம் நன்றி துணை அதிபர் என்றார். இதையடுத்து, அதே மேடையில் நின்று கொண்டிருந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிரித்தார்.
அதிபர் பைடனும் ஒபாமாவுக்கு சல்யூட் செய்தார். பின்னர், நகைச்சுவையாக கூறினேன் என்றார் ஒபாமா. இதையடுத்து, அங்கே திரண்டிருந்த செய்தியாளர்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் கர கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Former President @BarackObama: “Thank you. Vice President Biden. Vice President – that was a joke.” pic.twitter.com/dm0sBnM7P2
— CSPAN (@cspan) April 5, 2022
ஒமைக்ரான் வைரஸுக்கு புதிய தடுப்பூசி
ஆஸ்திரியாவில் ஒமைக்ரான் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வகைகளுக்கு எதிராக புதிய தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெறாதவர்களுக்கும் இந்த தடுப்பூசி பலன் அளிக்கும்.
வியன்னா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை, விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் செலுத்தி பரிசோதித்ததில் இது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரிய வந்துள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது, உடல் செல்களுக்குள் வைரசை நுழையவிடாமல் தடுக்கிறது.
இதனால் தொற்று ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். போதுமான நிதி கிடைத்தால், ஒப்புதலுக்கு தேவையான முதல் மருத்துவ பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு
பதவியேற்ற ஓராண்டுக்குள் இஸ்ரேல் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஜூன் மாதம் நப்தாலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இந்த நிலையில் ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே நப்தாலி பென்னட்டின் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நப்தாலி பென்னட் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதன்மூலம், நப்தாலி பென்னட் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், நிச்சயமாக ஆட்சி கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அப்படி நடந்தால் 3 ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தேர்தல் எப்போது?
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது, பிரதமரின் பரிந்துரைபேரில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பான பிரச்னையை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் அமர்வு நடத்தியது. அப்போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் தொடர்பான வெளிநாட்டு சதி குறித்து மேலும் அறிவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து இன்று நடக்கிறது. இதற்கு மத்தியில் 90 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு, உகந்த தேதிகளை பரிந்துரைக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி நேற்று கடிதம் எழுதினார்.
அலுவலகம் வரமாட்டோம் என அடம் பிடிக்கும் ஆப்பிள் ஊழியர்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஹைபிரிட் மாடல் என்ற அழைக்கப்படும் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திலும் சில நாட்கள் வீட்டிலும் இருந்தும் பணிபுரிய ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வற்புறுத்தினால் வேலையை விட்டுவிடவும் தயார் என்று கூறியுள்ளனர்.
கொரோனாவால் வீட்டிலிருந்த படியே வேலை என்ற முறையை பல நிறுவனங்கள் அறிவித்தன. இன்னமும் கூட பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறது.
சில நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திலும் சில நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு தெரிவித்து வருகிறது.
ஒரு சில நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil