/indian-express-tamil/media/media_files/2025/08/25/us-vice-president-jd-vance-2025-08-25-08-10-34.jpg)
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்தியா மீது வரி விதிப்பு: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மறைமுக வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு கடினமான சூழலை உருவாக்கவே, இந்த ‘பொருளாதார நெருக்கடி’ மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் என்.பி.சி. நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஜே.டி வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வான்ஸ், “ரஷ்யாவை உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்தவைக்க, டிரம்ப் ‘ஆக்ரோஷமான பொருளாதார நெம்புகோல்' (aggressive economic leverage) முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மறைமுக வரி விதிப்புகளும் அடங்கும்,” என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ததால், அதன் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த 3 நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்த வரி விதிப்புடன் சேர்த்து, இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் எந்தவொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும்.
அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, 'நியாயமற்றது' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த வரிவிதிப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தில் எண்ணெய் விவகாரமாக சித்தரிக்கப்படுகிறது" என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா மீது மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவும் வாங்குகின்றன” என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்ய முடியும் என அமெரிக்கா நம்புவதாக வான்ஸ் தெரிவித்தார். ரஷ்யா போரை நிறுத்தினால், மீண்டும் உலக பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்ற செய்தியை டிரம்ப் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வரி அழுத்தங்கள், இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை பாதிக்காது என்பதை இரு நாடுகளும் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில் உறுதி செய்தன. அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.