தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது தங்கள் நாட்டில் இல்லை என, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 40-க்கும் அதிகமான வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர், “ முதலில் ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் இல்லை” என்றார். மேலும் தொடர்ந்த அவர், “அதனை ஐக்கிய நாடுகள் சபையும், பாகிஸ்தானும் தடை செய்திருக்கிறது. இரண்டாவதாக எந்த அழுத்தத்தின் பேரிலும் நாங்கள் இதை செய்யவில்லை. புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானுக்குள்ளேயிருந்து நிகழ்த்தப்படவில்லை” என்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் அதே சி.என்.என் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, ”பயங்கரவாதத் தலைவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்” என ஒப்புக் கொண்டார்.
தற்போது இருவரின் வெவ்வேறு பதில்களும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.