பாகிஸ்தானில் காதலர் தினத்தை ஒளிப்பரப்ப தடை!

காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிப்பரப்ப அந்நாட்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அதே போல் பொது இடங்களில் காதலர்களின் வருகை வழக்கத்தை விட அதிமாகவே காணப்படும். ஆனால், சமீப காலமாக காதலர் தின கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பொது இடங்களில் காதலர் தினம் கொண்டுவதை இந்து அமைப்பினர் சில கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்துல் வாகித் என்பவர் இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், “காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது. காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம்” எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாட தடை விதித்துள்ளது. அத்துடன், ஊடகங்கள் காதலர் தின நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் காதலர் தின கொண்டாடத்திற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொது இடங்களில் இதுக் குறித்து விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது, அரசு நிறுவனங்கள் அதை கொண்டாடவும், ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close