பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெறுவதை தடுக்குமாறு, பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தது. தொடர் நிர்பந்தங்களின் விளைவாக, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவருமான ஹபீஜ் சயீத் உள்ளிட்ட 12 பேர் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்துவந்த 5 தொண்டு அமைப்புகளின் மீது பாகிஸ்தான் அரசு 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஹபீஜ் சயீத் உள்ளிட்டோர் மற்றும் தொண்டு அமைப்புகளின் மீது பாகிஸ்தானின் லாகூர், குஜ்ரன்வாலா மற்றும் முல்தான் உள்ளிட்ட இடங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
FATF அமைப்பும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையை தடுக்க பாகிஸ்தான் அரசுக்கு கெடுவிதித்திருந்தது. இந்த அமைப்பின் சார்பாக, கடந்த மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் அமைப்புகள், நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
FATF கூட்டத்தில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், சீனா, துருக்கி மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெற்றுவரும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று FATF அமைப்பு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், நாங்கள் பாகிஸ்தானின் வாய் வார்த்தை ஜாலத்தை நம்புபவர்களில்லை. நடவடிக்கையை செயலில்தான் பார்க்க விரும்புகிறோம் ; அதோடு புதிய பாகிஸ்தானையும் காண ஆவலாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.