அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தின.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது, காஷ்மீரில், இந்தியாவால் அசாதாரண நிலை நீடித்து வருகிறது. இதற்கு காரணமான இந்தியாவுக்கு இந்த கூட்டத்தின் மூலம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
காஷ்மீரில் எதற்கு இந்தியா 9 லட்சம் படையினரை குவித்துள்ளது. மோடி சொல்கிறார், காஷ்மீரின் செழிப்புக்காக அவர்கள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று. ராணுவப்படையினருக்கு அங்கு என்ன வேலை இருந்துவிடப்போகிறது. காஷ்மீரில், இந்தியா தொடர்ந்து அசாதாரண நிலையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் எந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றாலும், இந்தியா பாகிஸ்தானையே குறை கூறிவருகிறது. இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர்மூளும் அபாயம் நிலவிவருகிறது. போரின் காரணமாக, என்ன வேணும்னாலும் நிகழலாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இம்ரான் கான் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக உரையாற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 50 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சு முழுக்க முழுக்க இந்தியாவை குறைகூறும் விதத்திலேயே இருந்தது. இம்ரான் கான் தனது பேச்சில் ஓரிடத்தில் பிரதமர் மோடியை, அதிபர் என தவறுதலாக குறிப்பிட்டார். பாகிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாத இயக்கங்களின் கட்டமைப்பை பாகிஸ்தான் தொடர்ந்து அழித்து வருவதாக ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமர் மோடி உரை நிகழ்த்தி கிளம்பியவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கிளம்பிவிட்டார். சில இந்திய பிரதிநிதிகள் மட்டுமே, இம்ரான் கான் உரையின்போது இருந்தனர்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறியதாவது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் வழிகாட்டுதலின்படியும், இருதரப்பு பேச்சுவார்த்தையின் படி நடந்துகொள்வதாக தெரியவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவின் தன்னிச்சையான முடிவை சீனா கண்டிப்பதாக அவர் கூறினார்.