இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்காலத் தடை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய மற்றொரு நாள் போலீஸ் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் உதவியாளர் ஃபவத் சவுத்ரி கூறுகையில், போலீஸ் நடவடிக்கை மீதான தடையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் சரணடைந்தால், தோஷகானா வழக்கில் இம்ரான் கானைக் கைது செய்வதற்கான காவல்துறையின் முயற்சியை நிறுத்துவதாக இஸ்லாமாபாத் நீதிமன்ற நீதிபதி இன்று தெரிவித்தார். தோஷகானா ஊழல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் தொடர்பாக அவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்த காவல்துறை அதிகாரிகளுடன் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் 24 மணிநேர பதற்றத்திற்குப் பிறகு இது வந்துள்ளது.
இஸ்லாமாபாத் காவல்துறையின் “உண்மையான நோக்கம்” தன்னைக் கைது செய்வதல்ல, மாறாக “கடத்திச் சென்று படுகொலை செய்வதே” என்று இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், பெஷாவர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடருமாறு இம்ரான் கான் தனது ஆதரவாளர்களை வற்புறுத்தியதை அடுத்து எதிர்ப்புகள் பரவியுள்ளன.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம்
தாக்குதல்கள் மற்றும் இறப்புகள் முறையே 75 சதவீதம் மற்றும் 58 சதவீதம் குறைந்தாலும், தொடர்ந்து நான்காவது ஆண்டாக பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று பத்தாவது உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு செவ்வாயன்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், “அரசு அடக்குமுறை மற்றும் அரசு தரப்பின் வன்முறைச் செயல்கள் இதில் இல்லை என்றும், தாலிபான்கள் அரசாங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிலிருந்து அவர்கள் செய்த செயல்கள் அறிக்கையின் வரம்பில் சேர்க்கப்படவில்லை” என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
குறியீட்டில் இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஒரு சிறிய சரிவைக் குறிக்கிறது. குறியீட்டில் 25 மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்தியாவில் பதிலளித்தவர்கள் தங்கள் அன்றாட பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் போர் மற்றும் பயங்கரவாதத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்தனர்.
விமானப்படை பாதுகாப்பு உதவிச் செயலாளராக இந்திய அமெரிக்கர் தேர்வு
பென்டகனின் உயர்மட்ட சிவிலியன் தலைமைப் பதவிகளில் ஒன்றான விமானப்படையின் பாதுகாப்பு உதவிச் செயலாளராக இந்திய அமெரிக்கரான ரவி சவுத்ரியை அமெரிக்க செனட் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

செனட் 65-29 என வாக்களித்தது, முன்னாள் விமானப்படை அதிகாரியின் வேட்புமனுவை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் உறுதிப்படுத்தியது.
ரவி சவுத்ரி முன்பு அமெரிக்க போக்குவரத்துத் துறையில் மூத்த நிர்வாகியாக பணியாற்றினார், அங்கு அவர் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இல் வணிக விண்வெளி அலுவலகம், மேம்பட்ட திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் இயக்குநராக இருந்தார்.
லிபியாவில் 2.5 டன் யுரேனியம் திருட்டு
போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவில் ஒரு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 டன் இயற்கை யுரேனியம் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது, மேலும், பாதுகாப்பு மற்றும் பரவல் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.

இயற்கை யுரேனியத்தை எரிசக்தி உற்பத்தி அல்லது வெடிகுண்டு எரிபொருளுக்கு உடனடியாகப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil