காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து, இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதேபோல், பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. இந்திய திரைப்படங்கள் எதுவும் இனி திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை(செப்.9) சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
அவரது இந்த வெளிநாட்டு பயணத்துக்காக, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அந்நாட்டிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால், இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது என வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.