பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்!

தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம்

By: July 24, 2018, 7:37:25 PM

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் நாளை (ஜூலை 25) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 3,675 பேர், மாகாண சட்டசபை தேர்தல்களில் 8,895 பேர் என மொத்தம் 12,570 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஷ் ஷெரீப்பின் தம்பி ஷேபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்ற கட்சிகளில் இம்ரான்கான், பிலாவல் பூட்டோ ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 கோடி. வாக்களிக்க 85,300 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முதலில் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், இப்போது நவாஷ் ஷெரீப் கட்சியே முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், தேர்தல் வன்முறை சம்பவங்களும் மிக அதிகமாக நடந்தது. வன்முறையில் 180 பேர் பலியாகி இருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால், போலீசார் ராணுவத்தினர் என மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது. தற்போது பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முழு அரசையும் அவர்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

நவாஷ் ஷெரீப் கட்சி வெற்றி பெறுவதை ஐ.எஸ்.ஐ விரும்பவில்லை என்றும், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் ராணுவ புரட்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pakistan election 2018 polling set to begin at 8 am tomorrow country gets ready to elect new national provincial assemblies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X