பாகிஸ்தானில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான நிதிப்பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டின் ஜூன் மாதம் வரையிலான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி நிதிப்பற்றாக்குறை 8.9 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் இது 6.6 சதவீதமாக இருந்ததாக பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதிப்பற்றாக்குறை 5.6 சதவீதமாக வைத்துக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அரசின் தவறான அணுகுமுறைகளால் அந்த இலக்கு எட்டப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (International Monetary Fund) 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக பெற்றிருந்த நிலையில், அரசு மெத்தனமாக இருப்பதால், அதன் நிதி வருவாய் பற்றாக்குறை பேரிடியாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அரசு விழித்துக்கொள்ளாவிட்டால், பாகிஸ்தான் பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார அசாதாரண சூழல் நிலவிவருகிறது. நடப்பு நிதியாண்டிற்குள் வருவாய் இலக்கை, அரசால் நிறைவேற்ற இயலவில்லை என்றால், அதிக வரிவிதிப்புகளுடன் கூடிய மினி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று முன்னணி தொழிலதிபர் ஷமிமுல்லா தாரிக் தெரிவித்துள்ளார்.