பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக டான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், ”இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்,” என்று கூறினார்.
மேலும், "இம்ரான் கான் அடையாளம் தெரியாத நபர்களால் அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை ஐ.ஜி ஆகியோரை 15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்,” என்றும் ஃபவாத் சவுத்ரி கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இம்ரான் கான் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியுள்ளார். ரஷ்யா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அவரது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளால் அவரை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று அவர் குற்றம் சாட்டிய நிலையிலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தோஷகானாவுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் இந்த பரிசுகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் வருமானம் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்று இம்ரான் கான் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil