தோஷகானா ஊழல் வழக்கில் சனிக்கிழமையன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோஷகானா ஊழல் வழக்கு எனப்படும், 2018 முதல் 2022 வரையிலான பதவிக்காலத்தில் 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புள்ள அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் லாகூரில் இருந்து கைது செய்யப்பட்டார்.
அப்போது இம்ரான் கான் தனது ஆதரவாளர்களிடம் "அமைதியாக வீட்டில் உட்கார்ந்து இருக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், முன் பதிவு செய்யப்பட்ட செய்தியில், அமைதியான போராட்டமே முன்னோக்கி செல்லும் வழி என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த முறை கைது செய்யப்பட்ட போது என்ன நடந்தது?
இந்த ஆண்டில் இம்ரான் கான் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏப்ரல் 2022 இல் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த முறை அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர்.
தோஷகானா வழக்கு என்றால் என்ன?
ஆகஸ்ட் 2022 இல் தோஷகானா சர்ச்சை முன்னணியில் வந்தது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், தோஷகானாவிற்கு வழங்கப்பட்ட பரிசுகள் பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை என்று கூறி, இம்ரானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. மேலும், சில பரிசுகளை "சட்டவிரோதமாக" விற்பனை செய்வதன் மூலம் அவர் வருமானம் ஈட்டியதாகவும் குற்றம்சாட்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil