பாகிஸ்தானின் லர்கானா பகுதியில் இயங்கி வரும் கல்லூரியின் விடுதி அறையில் இருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மிர்புர் மதெல்லோ பகுதியில் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் நம்ரிதா சந்தானி. இவர் லர்கானா பகுதியில் செயல்பட்டு வரும் பிபி ஆஷிபா மருத்துவ கல்லூரியில், இறுதியாண்டு படித்து வருகிறார்.
சந்தானி, கல்லூரியின் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் லர்கானா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தானி, கொலை தான் செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் துப்பட்டாவுடன் கேபிள் வயரும் இருந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார். தாங்கள் இப்பகுதியில் சிறுபான்மையினராக இருப்பதால், தங்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், எங்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்தானியின் உடல், பிரேத பரிசோதனைக்காக, தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து சந்தானியின் பெற்றோர் வந்தபின் அவர்களது அனுமதி பெற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலை வெகுநேரமாகியும், சந்தானி அறையின் கதவு திறக்கப்படாததால், சக மாணவிகள் கதவை தட்டியுள்ளனர். எவ்வித பதிலும் இல்லாததால், வாட்ச்மேனின் உதவியுடன் கதவை உடைத்துள்ளனர். விடுதி அறையின் ஒரு ஓரத்தில் அவர் சடலமாக கிடந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தானி தற்கொலை தான் செய்துகொண்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என்று மருத்துவ கல்லூரி துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி, சிந்த் பல்கலைகழக மாணவரான நயிலா ரிண்ட், விடுதி அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForNimrita
இதற்கிடையே நம்ரிதாவுக்கு நீதி வேண்டுமென ட்விட்டரில் #JusticeForNimrita என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
நம்ரதாவுக்கு நீதி கேட்டு ‘டீன் தல்வாரில்’ போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நம்ரதாவின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.