International Terrorist Masood Azhar not in jail: சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைமையகத்தில் ஆடம்பர பங்களாவில் சொகுசாக வாழ்வதும் அங்கு இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவில் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியிலும் மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் மசூத் அசாரை ஐ.நா அமைப்பு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது மசூத் அசார் பாகிஸ்தானின் போலீஸ் காவலில் இல்லை என்பதும் பாகிஸ்தான் அரசு மசூத் அசாரை விடுதலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இருப்பதாக பாக்கிஸ்தான் சொல்வது பொய். மசூத் அசார் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பவல்பூரில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைமையகத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் மசூத் அசார் சொகுசாக இருப்பதாகவும் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யவும் தாக்குதல் நடத்த ஆலோசித்து வருவதாகவும் புலனாய்வு தகவல் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
இந்த சூழலில், காஷ்மீருக்குள் 200 பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருநதார். ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த சதித் திட்டத்தின் பின்னணியிலும் மசூத் அசார் இருக்கலாம் என்று புலனாய்வு துறை தகவல்கள் தெரிவிப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.