Pakistan News In Tamil: சீனாவின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியே அந்நாட்டின் ஏழ்மையை ஒழித்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சியை சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என சீனாவின் வளர்ச்சியை பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"கடந்த முப்பது ஆண்டுகளில் மிக வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரக்கூடிய ஒரே நாடு சீனா தான். அந்நாட்டிடம் இருந்து தான் வளர்ச்சி என்றால் என்ன என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட்டை சீன அரசு சரியான முறையில் பயன்படுத்தி ஏற்றுமதியை பெருக்கி வருகின்றது. மற்றும் ஏற்றுமதிக்கான புதிய தளங்களையும் நிறுவியுள்ளது. அதில் ஈட்டிய வருவாயை கொண்டு அந்நாட்டை ஏழ்மை இல்லாத நாடாக மாற்றியுள்ளது.
நாமும் பாகிஸ்தானை ஏழ்மை இல்லாத நாடாகவும், அதே வேளையில் வளர்ச்சி பாதையில் பயணிக்கிற நாடாகவும் மாற்றவுள்ளோம். சீனாவில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் தொழிற்சாலைகளுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க உள்ளோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்திருக்கிறோம். இந்த புதிய ஆண்டில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி ஒரு புதிய பாதையில் பயணிக்க உள்ளது.
நமக்கு போட்டியாக உள்ள நாடுகளை ஒப்பிடும்போது நம்முடைய ஏற்றுமதி அதிகரித்தே காணப்படுகின்றது. எனவே நாம் பொருளாதார வளர்ச்சியில் சரியான திசையில் தான் செல்கிறோம். நடப்பு ஆண்டில் தொழில்துறை வளர்ச்சியில் நமது அரசு கவனம் செலுத்தி வருகின்றது. சமீப காலங்களில் சிமென்ட் மற்றும் ஜவுளித் துறைகள் வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்கும், வணிகத்தை உருவாக்குவதற்கும் ஏற்ற வகையில் நம்முடைய கொள்கையை அமைத்துள்ளோம்.
2020 - ம் ஆண்டு தொற்றுநோயால் உலகமே மிக பெரிய சவாலை எதிர் கொண்டது. ஆனால் நமது அரசு அதை திறம்பட கையாண்டது. மற்றும் கடவுளின் கிருபையால், நம் மக்களை பசியில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பை வழங்கினோம்" என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"