பிரச்னையை பேசி தீர்க்க இந்தியா தயாரா? - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு

17 ஆண்டுகள் கழித்து ஆஃப்கானிஸ்தானில் ராணுவம் தீர்வாகாது, பதிலாக பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாகும் என்பதை இந்த உலகமே உணர்ந்தது. இந்தியா இதைப் பற்றி பேசக் கூடாதா? 

கடந்தவாரம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தக்குதலை அடுத்து, ’இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்து விட, இதற்கு பெரும் விலையை எதிரிகள் தர வேண்டும் என இந்திய பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்த வீடியோ அறிக்கையில், “சில நாட்களுக்கு முன்னர், புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்கு, ஒரு பிரதமராக உடனடியாக நான் பதிலளித்திருக்க வேண்டும்.

எனினும் சவுதி அரேபிய இளவரசர் முதலீட்டு மாநாட்டிற்காக இங்கு வந்திருந்ததால், அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது வாய் திறந்தால், இளவரசரின் வருகை கவனம் சிதறிவிடக் கூடும் என்பதால், இதற்கு பதிலளிக்க வேண்டாம் என நினைத்திருந்தேன்.

இப்போது இளவரசர் நாடு திரும்பி விட்டார். அதனால் இப்போது பதிலளிக்கலாம் என விரும்புகிறேன்.

இந்திய அரசாங்கத்துக்கு எனது பதில்: பாகிஸ்தானுக்கு இதில் என்ன லாபம் என யோசிக்காமல், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியிருக்கிறீர்கள். மிகுந்த சிரமப்பட்டு, நீண்ட கால  திட்டமிடலுக்குப் பிறகு அத்தகைய சிறப்பு வாய்ந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். இப்படியான ஒரு முக்கிய சூழலில் தாக்குதல் நடத்தி மாநாட்டை சீரழிக்க முட்டாள் கூட நினைக்க மாட்டான். ஒருவேளை இளவரசர் வருகை திட்டமிடப்படாமல் இருந்திருந்தால் கூட, அது எப்படி பாகிஸ்தானுக்கு பயன் பெற்று தரும்?

வலிமையை நோக்கி பாகிஸ்தான் நகரும் நேரத்தில் 15 ஆண்டுகளாக நாங்கள் பயங்கரவாதத்தை கண்டு வருகிறோம். இதில் 70000 பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் வீழ்ச்சியில் உள்ளது.. அமைதி அடிவானத்தில் உள்ளது… நாங்கள் ஏன் தாக்க வேண்டும்? அதனால் எங்களுக்கு என்ன பயன்?

இந்தியாவின் பிரதமரை நான் கேட்க விரும்புவது – நீங்கள் கடந்த கால சிக்கல்களில் மாட்டிக் கொண்டால், எப்போதெல்லாம் காஷ்மீரில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தானை குற்றம் சொல்லி, பழி தீர்க்குறீர்கள். காஷ்மீர் பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு பதிலாக எங்களை அடித்து நொறுக்குகிறீர்கள். இது புதிய மனநிலையும் புதிய சிந்தனையும் கொண்ட புதிய பாகிஸ்தான் என நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். எங்கள் நாட்டிற்குள்ளும், வெளி நாடுகளிலும் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு யாரும் விரும்பவில்லை. எங்களுக்கு உறுதிப்பாடு வேண்டும்.

அதனால், புல்வாமா குறித்த எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை இந்திய அரசாங்கத்துக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நடத்தும் விசாரணையில் எந்த பாகிஸ்தான் நபராவது சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால், அந்தத் தகவலை எங்கள் அரசாங்கத்திடம் கொடுங்கள். அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த நடவடிக்கையை எடுக்க மாட்டோம். ஆனால் பாகிஸ்தானை நீங்கள் எதிரியாக முன்னிறுத்துவீர்கள் என்பதற்காக தகுந்த நடவடிக்கையை எடுப்போம்.

யாராவது பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கான மண்ணாக பயன்படுத்தினால், அது எங்களுக்கும் எதிரான செயல் தான்.

எப்போதெல்லாம் இந்தியாவை கலந்துப் பேச கேட்டாலும், பயங்கரவாதத்தை பற்றி விவாதிக்க முன்னிபந்தனை கோருகிறீர்கள். நான் சொல்கிறேன், பயங்கரவாதத்தைப் பற்றி பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். பயங்கரவாதம் மொத்த பிராந்தியத்திற்கே பிரச்னை, அதை முடிவுக்குக் கொண்டுவரவே நாங்கள் விரும்புகிறோம்.

பயங்கரவாதத்தின் காரணமாக பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 70,000 பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். 100 மில்லியன் டாலர்களை இழந்துள்ளோம். அதனால் நாங்கள் உங்களுடன் பேச தயாராக இருக்கிறோம்.

இறுதியாக இரண்டு விஷயங்களைக் கூறிக் கொள்கிறேன் – இந்தியாவில் ஒரு புதிய சிந்தனை உருவாக வேண்டும். காஷ்மீர் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் ஏன் மரணத்திற்கு அஞ்சுவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கு நிச்சயம் சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு பரிமாண ஒடுக்குமுறை, சித்திரவதை மற்றும் ராணுவத்தின் மூலம் தீர்வு காண்பதெல்லாம், இந்தப் பிரச்னைக்கு தீர்வாகும் என நீங்கள் நினைக்கிறீர்களா? இதுவரை வேலை செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் அது வேலை செய்யும் என நினைக்கிறீர்களா?

17 ஆண்டுகள் கழித்து ஆஃப்கானிஸ்தானில் ராணுவம் தீர்வாகாது, பதிலாக பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாகும் என்பதை இந்த உலகமே உணர்ந்தது. இந்தியா இதைப் பற்றி பேசக் கூடாதா?

பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும், பழி வாங்க வேண்டும், தாக்குதல் நடத்த வேண்டுமென அரசியல் வாதிகள் கொந்தளிப்பதை இந்திய ஊடகங்களின் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு தனி நபர் அல்லது நாடு நீதிபதியாக மாற உலகில் எந்த சட்டம் அனுமதியளித்துள்ளது? என்ன ஒரு நீதி அமைப்பு இது? இது உங்களுக்கு தேர்தல் வரும் ஆண்டு. பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிப்போம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் நிறைய எனெர்ஜியைப் பெறுவீர்கள் என்பதை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். நீங்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நினைத்தால், பதிலடி கொடுக்க நாங்கள் யோசிக்க மாட்டோம். மாறாக, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். பதிலளிக்க பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. ஒரு போரை தொடங்குவது எளிதானது என எங்களுக்குத் தெரியும். போரை தொடங்குவதும், நிறுத்துவதும் மனிதர்களாகிய நம் கைகளில் தான் உள்ளது. இது எவ்வழியில் செல்லும் என்பதை அல்லாஹ் மட்டும் தான் அறிவார். எனவே, நான் நல்ல உணர்வு நிலவும் நம்புகிறேன், எங்கள் உளவுத்துறை மற்றும் ஞானத்தை நாங்கள் பயன்படுத்துவோம். ஆஃப்கானிஸ்தானைப் போலவே, இந்த பிரச்னையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close