ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து மேலாதிக்க சித்தாந்தம், நாஜிக்களின் ஆரிய மேலாதிக்கத்துடன் ஒத்துப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆக.5ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு 6ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடும் அமளிகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பிரிவு 370ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், இதனால், ஜம்மு & காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது.
பாகிஸ்தானிற்கான இந்தியாவின் உயர் ஆணையர் (High Commissioner) திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இஸ்லமாபாத்தில் இருந்து டெல்லிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்தியாவுடனான இருநாட்டு ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை முடித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் ஐ.நாவிடம் மேல் முறையீடு செய்யவும், அந்நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில், ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாஜிக்களின் ஆரிய மேலாதிக்க சித்தாந்தத்தைப் போல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து மேலாதிக்க சித்தாந்தம் அச்சமூட்டுகிறது. இது இந்தியா கட்டுப்பாட்டு காஷ்மீரோடு நிற்காமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை ஒடுக்கும். பிறகு, அது பாகிஸ்தானையும் குறிவைக்கும். நாட்டின் வளர்ச்சி என்ற ஹிட்லரின் பாதையின் மறுவடிவம் தான் ஹிந்து மேலாதிக்கம்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது இன அழிப்பு மூலம் காஷ்மீரின் தன்மையை மாற்றும் முயற்சி ஆகும். ஆனால், உலகம் அதை பார்த்துக் கொண்டிருக்குமா என்பது தான் இங்கு கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.