/indian-express-tamil/media/media_files/2025/09/23/pakistan-pm-shehbaz-sharif-2025-09-23-09-58-52.jpg)
'காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல்...' அமைதி சாத்தியமில்லை: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட கால அமைதியான உறவுகள் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நடைபெற்ற வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா "ஒரு போட்டி நாடாக இல்லாமல், ஒரு கூட்டுறவு அண்டை நாடாக" இருக்க வேண்டும் என்று கூறினார்.
“காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை நிறுவ முடியும் என்று யாராவது நம்பினால், அவர்கள் ஒரு முட்டாள் தனமான கற்பனை உலகில் வாழ்கிறார்கள்” என்று ஷெரீப் குறிப்பிட்டார். இரு நாடுகளும் 4 போர்களில் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்துள்ளதாக ஷெரீப் சுட்டிக்காட்டினார்.
மக்களின் செழிப்புக்குச் செலவிடப்பட வேண்டிய வளங்கள் வீணடிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறினார். "அமைதியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது தொடர்ந்து சண்டையிடுவதா என்பது நம் கையில் தான் உள்ளது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தான்-இந்தியா அண்டை நாடுகள், நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருக்கட்டும்: காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியாது. காஷ்மீர் மக்களின் ரத்தம் வீண் போகாது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஷெபாஸ் ஷெரீப் - டிரம்ப் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80-வது அமர்வின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஷெபாஸ் ஷெரீப்புடன் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் உட்படப் பல மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட், டிரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் "முக்கியமான உரையை" நிகழ்த்துவார் என்று கூறினார். அவர் தீர்த்து வைத்த "7 போர்கள் மற்றும் மோதல்கள்" பற்றி இந்த உரையில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷெரீப்புடனான சந்திப்பைத் தவிர, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உக்ரைன், அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனும் டிரம்ப் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். அன்றைய தினம், கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துர்கியே, பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் டிரம்ப் ஒரு பன்முக சந்திப்பையும் நடத்தவுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us