காஷ்மீர் விவகாரம் குறித்த திமுகவின் போராட்டம் குறித்த அறிவிப்பு, பாகிஸ்தான் ரேடியோவின் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, மற்றும் கனிமொழி இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் வகையில் அமலில் இருந்த 370வது சட்டப்பிரிவு மற்றும் 35ஏ சட்டப்பிரிவை, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதோடுநின்றுவிடாமல், காஷ்மீர் மாநிலத்தை, சட்டசபை கொண்ட காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் சட்டசபை இல்லாத லடாக் யூனியன் பிரதேசம் என்ற இருபிரிவுகளாக பிரித்து கெஜட்டும் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளபோதிலும், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர், இன்று ( ஆகஸ்ட் 22ம் தேதி)டில்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
காஷ்மீர் விவகாரம் குறித்த பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு அண்டைநாடான பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ரேடியோ, திமுக தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்ட செய்தி குறித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2019ல் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாமல், ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, மற்றும் கனிமொழி இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளது.