மனித உரிமை ஆர்வலர் கரிமா பலூச் மரணத்தில் சதித் திட்டம் இருப்பதாக கருதவில்லை என்று டொராண்டோ நகர் காவல் துறை தெரிவித்தது. கரிமா பலூச், பலுசிஸ்தான் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த திங்கள்கிழமை ,டொராண்டோ டவுன்டவுன் (downtown) நீர்முனைக்கு அருகே கரிமாவின் உடல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மரணமடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, 37 வயதான கரிமாவைக் காணவில்லை.
"இது தற்போது குற்றம் இல்லாத மரணம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாக நம்பப்படவில்லை" என்று டொராண்டோ காவல்துறை செய்தித் தொடர்பாளர் கரோலின் டி க்ளோட் கூறினார்.
கரிமா பலூச் என்றும் அழைக்கப்படும் மெஹ்ராப், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி கனடா நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொராண்டோவின் நீர்முனை மற்றும் தீவு பகுதிகளில் கரிமா அடிக்கடி வருகை தந்திருக்கிறார். மேற்படி, விவரங்களை சேமித்து வருகிறோம் என்றும் காவல்துறை தெரிவித்தனர்.
பலுசிஸ்தானில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், சித்ரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் அரசம், அந்நாட்டு இராணுவமும் திட்டமிட்டு செய்து வருவதாக கரிமா பலூச் உலகளவில் தீவிர பிரச்சாரம் செய்தார் .
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக சிறிய பிரிவினைவாத குழுக்கள் மற்றும் தேசியவாதிகளால் குறைந்த அளவிலான கிளர்ச்சியின் காட்சியாக உள்ளது, அவர்கள் பாகுபாடு குறித்து புகார் கூறுகிறார்கள் மற்றும் தங்கள் மாகாணத்தின் வளங்கள் மற்றும் செல்வத்தில் ஒரு சிறந்த பங்கைக் கோருகிறார்கள்.
தனது போராட்டத்தில், பலுசிஸ்தான் பெண்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேலும், சட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சட்ட அமைப்புகளும், மதக்குழுக்களும் பெண்களுக்கு குறிப்பாக விளிம்பு நிலைப் பிரிவிலிருக்கும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையையும் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, கனடாவிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கரிமா மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய கனடா அரசை அணுகியுள்ளதாக தெரிவித்தது.