Pakistanis protest outside the Indian High Commission: இந்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் வசிக்கும் பாக்கிஸ்தானியர்கள் பேரணியாக வந்து இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்கு காஷ்மீர் மக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் பாக்கிஸ்தானியர்கள் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடியை ஏந்தியபடி இந்திய தூதரகம் நோக்கி பேரணியாக வந்தனர். பாக்கிஸ்தானியர்களின் பேரணியில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்.பி.-க்கள் சிலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அங்கே, பாக்கிஸ்தானியர்கள் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் காஷ்மீர் விடுதலை முழக்கத்தை எழுப்பியபடி இந்திய தூதரகம் மீது கற்கள், முட்டை, காலி தண்ணிர் பாட்டில் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தை இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதலில் உடைந்த இந்திய தூதரக அலுவலகக் கண்ணாடி
இதனால், இந்திய தூதரகம் பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, தூதரக அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்களின் பேரணி, ஆர்ப்பாட்ட புகைப்படங்களையும், இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதையும் லண்டன் மேயர் டுவிட்டரில் டேக் செய்து முறையிட்டுள்ளனர். பாக்கிஸ்தானியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.