ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை வெள்ளிக்கிழமை இஸ்லாமிய போராளிகளான தாலிபான் அமைப்பு கைப்பற்றியதாக மூன்று தாலிபான் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஒரு தாலிபான் எதிர்ப்புத் தலைவர் இதனை மறுத்துள்ளார்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், நாங்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கட்டுப்படுத்துகிறோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் கட்டளையின் கீழ் உள்ளது,” என்று ஒரு தாலிபான் தளபதி கூறினார்.
காபூல் முழுவதும் காதை துளைக்கும் அளவுக்கான துப்பாக்கி வெடிப்பு கொண்டாட்டங்கள் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் பஞ்ச்ஷிரின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றன.
இந்த அறிக்கைகளை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை, இது உண்மையாக இருந்தால் தாலிபான்கள் முதன்முதலில் 1996 மற்றும் 2001 க்கு இடையில் நாட்டை ஆட்சி செய்தபோது சாதிக்க முடியாத, ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாடு தாலிபான்களுக்கு இப்போது கிடைக்கும்.
எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே, தங்கள் தரப்பு விட்டுக்கொடுக்கவில்லை என்றார். "நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் தாலிபான்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறோம், ”என்று அவர் பிபிசி உலக பத்திரிகையாளரின் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கிளிப்பில் கூறினார். "களம் எங்கள் வசம் உள்ளது, நாங்கள் எதிர்த்து வருகிறோம்."
பல எதிர்ப்புத் தலைவர்களும் பஞ்ச்ஷிரின் வீழ்ச்சியின் செய்திகளை நிராகரித்தனர், அங்கு பிராந்திய போராளிகள் மற்றும் பழைய அரசாங்கப் படைகளின் எஞ்சியுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் திரண்டனர்.
”பஞ்ச்ஷீர் வெற்றி பற்றிய செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவி வருகின்றன. இது பொய்” என்று படைகளை வழிநடத்தும் அகமது மசூத் கூறினார்.
பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் கடுமையான சண்டை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகள் இருந்தன. பஞ்ச்ஷீர் ஒரு குறுகிய நுழைவாயிலைத் தவிர பிற பகுதிகள் மலைகளை அரணாக கொண்டது. மேலும், சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் முந்தைய தாலிபான் அரசுக்கு எதிராக 2001 இல் அகற்றப்பட்டது.
இதற்கிடையில், தலிபான்கள் ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்னர், 46 இராணுவ விமானங்களை நாட்டிலிருந்து வெளியேற்றிய, அமெரிக்க பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தான் விமானிகள், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உஸ்பெகிஸ்தான் முகாமிலிருந்து எப்போது வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
"நாங்கள் சிறையில் இருப்பதைப் போல் உள்ளோம்" என்று ஒரு விமானி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் வேகமாக முன்னேறிய பிறகு ஆகஸ்ட் 15 அன்று காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர்.
புதிய அரசாங்கம்
முன்னதாக, தாலிபான் வட்டாரங்கள், குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை வழிநடத்துவார் என விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். தாலிபான் அரசின் உடனடி முன்னுரிமை வறட்சியால் சூழப்பட்ட ஒரு பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்ப்பது மற்றும் ஆகஸ்ட் 30 அன்று அமெரிக்கப் படைகள் கொந்தளிப்பான இழுபறியை முடிப்பதற்குள், சுமார் 240,000 ஆப்கானியர்களைக் கொன்ற 20 வருட மோதலின் அழிவுகளைத் தவிர்ப்பது.
ஆப்கானிஸ்தான் மனிதாபிமான பேரழிவை மட்டுமல்லாமல், ஐஎஸ் அமைப்பின் உள்ளூர் கிளை உட்பட போட்டி ஜிஹாதிக் குழுக்களிடமிருந்து அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறது.
மறைந்த தாலிபானின் இணை நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் ஆகியோர் மூத்த பதவிகளில் பரதருடன் இணைவார்கள் என்று மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன. "அனைத்து முன்னணி தலைவர்களும் காபூலுக்கு வந்துவிட்டனர், அங்கு புதிய அரசாங்கத்தை அறிவிப்பதற்கான ஆயத்த பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன" என்று தாலிபான் தரப்பில் ஒருவர் கூறினார்.
தாலிபானின் உயர்ந்த மதத் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா, மத விஷயங்கள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவார் என்று மற்றொரு தாலிபான் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தாலிபான் அமைப்பினர் ஒருமித்த அரசாங்கத்தை உருவாக்க விரும்புவதாக பேசினாலும், இடைக்கால அரசாங்கம் தாலிபான் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் என்று தீவிரவாதிகளுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறியது.
இடைக்கால அரசாங்கம், 12 முஸ்லீம் அறிஞர்களின் ஆலோசனைக் குழு அல்லது ஷூராவுடன் 25 அமைச்சகங்களை உள்ளடக்கும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறுகிறது.
ஆப்கானிஸ்தான் சமூகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒரு அரசியலமைப்பு மற்றும் எதிர்கால அரசாங்கத்தின் அமைப்பு பற்றி விவாதிக்க, ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் ஒரு லோயா ஜிர்கா, அல்லது மாபெரும் சட்டமன்றம், அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தாலிபான் வட்டாரம் தெரிவிக்கிறது.
பல ஆண்டுகளாக நாட்டிற்கு கிடைத்து வந்த உதவிகள் இல்லாமல், தாலிபான்கள் பொருளாதார சரிவை தவிர்ப்பது கடினமாக இருக்கும்.
மேற்கத்திய சக்திகள் தாலிபான்களுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக கூறுகின்றன, ஆனால் அரசாங்கத்தின் முறையான அங்கீகாரம் மற்றும் பரந்த பொருளாதார உதவிகள் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தேவை. வெறும் வாக்குறுதிகள் அல்ல. 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்தபோது, தாலிபான்கள் வன்முறையான தண்டனைகளை விதித்தனர் மற்றும் பெண்கள் மற்றும் இளம் பெண்களை பள்ளி மற்றும் வேலைக்கு செல்ல தடை விதித்தனர்.
இந்த முறை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், பழிவாங்குவதைத் தவிர்ப்பதாகவும் உறுதியளித்து உலகிற்கு ஒரு சமரச முகத்தை முன்வைக்க தாலிபான் முயன்றது, இருப்பினும் அது எந்த சமூக விதிகளை அமல்படுத்தும் என்பதை இன்னும் விளக்கவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகள் அதன் உத்தரவாதங்களில் சந்தேகம் கொண்டுள்ளன.
பெண்களின் உரிமைகள்
தாலிபான்கள் பெண்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்வி மற்றும் தொழிலாளர் துறையில் அவர்களின் குறிப்பிடத்தக்க ஆதாயங்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டஜன் கணக்கான பெண்கள் ஜனாதிபதி மாளிகை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"பெண்கள் இல்லாததால், எந்த சமுதாயமும் முன்னேறாது, என்பதே எங்கள் ஆர்ப்பாட்டம்" என்று ஒரு எதிர்ப்பாளர், ஃபதேமா எடெமாடி கூறினார்.
ஆயுதம் ஏந்திய தாலிபான் தீவிரவாதி தலையிட்ட பிறகு பெரும்பாலான பெண்கள் கலைந்து செல்வதை ராய்ட்டர்ஸ் பெற்ற காட்சிகள் காட்டின.
ஆப்கானிஸ்தானின் 250 பெண் நீதிபதிகள், அவர்களால் சிறையிலிடப்பட்டு தாலிபான்களால் விடுவிக்கப்பட்ட ஆண்களுக்கு பயப்படுகிறார்கள். "நான்கு அல்லது ஐந்து தாலிபான் உறுப்பினர்கள் வந்து என் வீட்டில் உள்ளவர்களிடம் 'இந்த பெண் நீதிபதி எங்கே?' என்று. கேட்டார்கள். அந்த தாலிபான் உறுப்பினர்கள் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்" என்று ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்ற பெயர் வெளியிட விரும்பாத ஒரு நீதிபதி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.