அமெரிக்க நாட்டின் தலை சிறந்த டாக்ஸி சேவையை அளிக்கும் நிறுவனமாக உபெர் உள்ளது. கடந்த சில நாட்களாக உபெர் தானியங்கி கார் சேவையின் சோதனையில் ஈடுபட்டு வந்தது. அரிசோனா மாநிலத்தில், உபெரின் தானியங்கி கார் ஒன்று சேவையில் இருந்தபோது 49 வயது பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதனைத் தொடர்ந்து தானியங்கி கார் சேவைகள் டெம்ப், பிட்ஸ்பர்க், டொராண்டோ, சான் பிரான்சிச்கோ உட்பட அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் கனடா நாட்டிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான காரை போலீசார் பறிமுதல் செய்து விபத்தின் காரணம் அறியும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியையும் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உபெர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற தானியங்கி கார் விபத்து முதன் முறையாக நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மறைந்த அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நிறுவனத்தின் ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துள்ளது.