அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில், இந்தியாவில் அனைவரும் சவுக்கியம் என்று தமிழ், பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளில் குறிப்பிட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழை்ப்பாளராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்றார்.
ஒரே நாடு, ஒரே மொழி விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கிவைத்திருந்த நிலையில், இந்தியாவில் இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர், அமித் ஷா, தன் பேச்சை திரும்ப பெற்றிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி, இந்தியாவில் அனைவரும் சவுக்கியம் என்று தமிழ், பெங்காலி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் பேசி, மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையில் தீவிரமாக இல்லை என்று குறிப்பால் உணர்த்தினார்.
அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க நண்பர்களிடம், இந்தியாவில் எல்லாரும் நலமாக உள்ளனர் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபர் பதவியை அலங்கரிப்பார் என்று பிரதமர் மோடி கூறியபோது. அரங்கமே அதிர்ந்தது.
டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில், அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. டிரம்ப், அமெரிக்கா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடுகிறார். இந்தியாவோடு அமெரிக்கா சிறந்த நட்புறவில் உள்ளது. அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அந்த பதவியை மேலும் அலங்கரிப்பார் என்று பிரதமர் மோடி கூறினார்.