பிம்ஸ்டெக் மாநாடு : வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நேபாளத்தில் நடைபெறுகிறது.
வங்காள விரிகுடாவின் அருகே அமைந்திருக்கும் நாடுகள் மத்தியில் அமைதி மற்றும் வளமான சூழல் நிலவுவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் சிறிசேன ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, காத்மாண்டு விமான நிலையத்தில், அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஐஸ்வர் போக்ரேல் ராஜ மரியாதை அளித்து வரவேற்றார்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இரண்டு நாட்கள் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாடு:
நேபாளம் கிளம்பும் போது, இந்த பிம்ஸ்டெக் மாநாடு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)) இந்தியாவிற்கும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று இம்மாநாட்டினைப் பற்றி பேசினார் நரேந்திர மோடி. மேலும் தென்கிழக்கு ஆசியவுடனான நட்புறவினை நீட்டிக்கும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றும் அவர் பேசினார்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களிடம் வங்காள விரிகுடா பகுதி நாடுகளுடனான நட்புறவு, அமைதி, மற்றும் வளமான எதிர்காலம் குறித்து பேசுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
நேபாளில் இருக்கும் பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலியும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். நரேந்திர மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் சிறிசேன ஆகியோரை இன்று சந்தித்து பேச உள்ளார்.
வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் 22%னை உள்ளடக்கியது என்பதால் இம்மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.