அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடி, இரண்டு முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச உள்ளார்.
இந்த மாதத்தின் ஒருவார கால அளவிற்குள், இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் இரண்டாவது முறையாக சந்தித்து பேசவுள்ள நிகழ்வு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, சர்வதேச அளவில், இருநாடுகளுக்கிடையே பரஸ்பர நட்புறவை வெளிக்காட்டுவதாக உள்ளதாவும், இந்த நூற்றாண்டின் சிறந்த நட்பு நாடுகளாக இந்திய - அமெரிக்க நாடுகள் உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மோடி, இந்திய பிரதமராக கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். இந்த 4 மாதங்களுக்குள் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை ஜப்பானில் நடந்த ஜி-20 மாநாடு மற்றும் பிரான்சில் நடந்த ஜி-7 மாநாடு என இரண்டுமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில், இந்த வார இறுதியில், அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் மோடி, இந்த முறையும் அமெரிக்க அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்துப்பேச உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் சிரிங்ளா, வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இரு நாட்டு தலைவர்களும், சில மாதங்களுக்குள்ளாகவே, 4 முறை சந்தித்துப்பேசியுள்ளனர். இந்தியாவின் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனமும், அமெரிக்காவின் ஹெரிடேஜ் பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய - அமெரிக்க நட்புறவின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் மோடி - டிரம்ப் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி, சனிக்கிழமை (21ம் தேதி), அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஹூஸ்டன் நகரில் நடக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் mega “Howdy Modi” rally நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 22ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப்பேச உள்ளனர்.
பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சந்திப்பு அதிகமுறை நடைபெற்றிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களில், பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நான்காவது முறையாக சந்தித்துப்பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் , அமெரிக்காவும் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மட்டும் இணைந்து செயல்படுவது மட்டுமல்லாது, போர்ப்படை பயிற்சிகளிலும் மலபார் கப்பற்படை பயிற்சி ( இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான்), கோப் இந்தியா ( விமானப்படை), யுத் அபியாஸ் (தரைப்படை) மற்றும் வஜ்ரா பிரஹார் (சிறப்புப்படை) என உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப்படைகள் விவகாரத்திலும், மற்ற சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக, இந்திய - அமெரிக்க நாடுகளின் நட்புறவு விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.