Pope Francis gives little girl free run of stage: போப் பிரான்சிஸ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தடையின்றி செல்வதற்கும் கைத்தட்டி நடனமாடுவதற்கும் அனுமத்தித்து கூட்டத்தை மகிழ்வித்தார்.
இளஞ்சிவப்பு நிற டி சர்ட் அணிந்த அந்த சிறுமி, பார்வையாளர்கள் மண்டபத்தின் முன்புறத்தில் அமர்ந்திருந்த தனது தாயிடமிருந்து நழுவி அங்கே இருந்த பளிங்கு மேடையை அடைந்தாள். அந்த சிறுமி போப் பிரான்ஸிஸ்க்கு முன்பு முன்னும் பின்னுமாக ஓடினாள். குதித்தாள். உரத்து சத்தமிட்டாள். கை தட்டினாள். அப்போது பாதுகாப்பு காவலர் தடுக்க முயல, போப் பிரான்சிஸ் அந்த சிறுமியை அவள் விருப்பப்படி அப்படியே விடும்படி அந்த காவலருக்கு சமிக்ஞை செய்தார். பின்னர், அந்த சிறுமி தனது தாயிடம் திரும்பி சென்றாள். சிறுமியின் தாய் அவளை அசைய விடாமல் வைத்திருக்க விரும்பினாள். ஆனால், அந்த சிறுமி தாயிடம் இருந்து நழுவி மீண்டும் மேடைக்குச் செல்ல வாட்டிகனின் பார்வையாளர் மண்டபத்தில் இருந்த கூட்டத்தினர் அனைவரும் அந்த சிறுமிக்கு கைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த ஏழைச் சிறுமி ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் என்ன செய்கிறாள் என்றே அவளுக்குத் தெரியாது என்று பார்வையாளர்களிடம் போப் பிரான்சிஸ் கூறினார். அந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
“நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். எல்லோரும் தங்கள் இதயத்திலிருந்து பதிலளிக்க வேண்டும். நான் அந்த சிறுமியைப் பார்த்தபோது அவளுக்காக ஜெபித்தேனா? கர்த்தர் அவளை குணமாக்கி அவளைப் பாதுகாக்க நாண் பிரார்த்தனை செய்தேனா? அவளுடைய பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்தேனா?” என்று போப் பிரான்சிஸ் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் பார்க்கின்றபோது, நாம் அவசியம் பிரார்த்திக்க வேண்டும். எப்போதும் இந்தக் கேள்வியைக் கேட்க இந்த சூழல் நமக்கு உதவும்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு, ஒரு ஆட்டிசம் சிறுவனை மேடையில் விளையாட போப் பிரான்சிஸ் அனுமதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.